குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினார்.
அஞ்சுகிராமம் பிப் 12
குமரி மாவட்டம் மருங்கூர் குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் புதிய வகுப்பறைக்கான கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு குமரி மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சீனிவாசன், துணைத் தலைவர், பாலரோகிணி ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன், ஊர் தலைவர் சுபாஷ், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும் பிரபல சினிமா இயக்குனருமான சமூகப் போராளி பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு கூடுதல் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஊர்த்தலைவர் பஞ்சாயத்து தலைவர் துணைத்தலைவர் எஸ்.எம்.சி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இவங்க எல்லாருடைய வேண்டுகோளின் படி கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்ததற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது வாழ்க்கையில் கல்வியும், பெண்களின் வளர்ச்சியும் இரு கண்களாக நினைத்து செயலாற்றி வருகிறேன்.
அரசு பள்ளியில் தான் ஏழை மாணவர்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கு. அவங்க படிச்ச வளரனும். ஏழை மாணவர்களாக பிறப்பது தவறல்ல. ஆனால் வளர்ச்சி பெருசாக இருக்கணும். பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையின் முதுமொழியின் அடிப்படையிலும் தான் கல்விக்காக வகுப்பறைகள் கட்டிக் கொடுப்பது, விளையாட்டு உபகரணங்கள் கொடுப்பது உள்ளிட்ட கல்விப் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.ஒரு ஊரில் கல்வி சிறப்பாக அமைந்து விட்டால் அது அந்த ஊரை வளர்த்துவிடும். பல ஊர்களில் ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வளரும் அடிப்படையிலும், அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும், நாளைய நமது தலைமுறைகள் செல்போனிலும் மது போன்ற போதை வஸ்துகளில் சிக்கி சீரழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் இந்த மாதிரி கல்வித் திருப்பணிகளை நான் செய்துக்கிட்டு இருக்கேன்.
எல்லா மக்களும் எனக்கு ஆதரவு தருவதற்காக இந்த நேரத்திலே நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஸ்டார்மின், கவுன்சிலர் நாராயண பெருமாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சதா, கலப்பை மக்கள் இயக்க அமைப்பாளர் அனிதா, ரஜினி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.